குலத்தை காக்கும் தெய்வம் குல தெய்வம். ஒருவரது குலம் ஆலமரம் போல தழைத்து ஒங்க என்றும் துணை வருவது குல தெய்வம் என்றால் மிகை ஆகாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் வணங்கி வந்த குல தெய்வம் கட்டாயம் இருக்கும். அந்த தெய்வத்தை தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக அடுத்து அடுத்து வரும் சந்ததியினர் வணங்கி வருவார்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குல தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் நமது வாழ்க்கை வளமாக இருக்கும். குல தெய்வத்தை வணங்காமல் பிற தெய்வங்களை வணங்கினால் பயன் இல்லை. நாம் எந்தவொரு செயலை ஆரம்பித்தாலும் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி!
குல தெய்வ கோவிலுக்குச் செல்லும் போது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் கோவிலுக்கு தீபம் ஏற்ற நெய், எண்ணெய் திரி முதலானவற்றை வாங்கி அளிக்கலாம். அம்மன் கோவிலாக இருந்தால் மஞ்சள் கும்குமம் வாங்கி அளிக்கலாம். வருடம் ஒரு முறையாவது அபிஷேக ஆராதனை செய்து வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் அவசியம். அல்லது குல வழக்கப்படி பொங்கல் அல்லது படையலிட்டு பிரார்த்தனை மேற்கொள்வது அவசியம். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும் குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்யவேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களைச் செய்யலாம்.